உலகத் திருக்குறள் கூட்டமைப்பும் விருதுநகர் குறள்நெறிக் கழகமும் இணைந்து நடத்தும் திருக்குறள் மறுமலர்ச்சி மாநாடு விருதுநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் ஆற்றிய உரை, வடவர் தர்மம் என்பது வேளாண்மையை இழிவாகக் கருதியது. ஆனால் திருவள்ளுவரோ 'சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்' மற்றும் 'உழுதுவாழ்வாரே வாழ்வார்' என்று உழவுத் தொழிலை பெருமைப்படுத்த 'உழவு' என்ற தனி அதிகாரத்தையே அமைத்துள்ளார். சமணம், பௌத்தம், வைதீகம் ஆகிய சமயங்கள் பிறரிடம் சென்று பிச்சை எடுப்பதை ஏற்றுக்கொண்ட சமயங்கள்; அதை ஒரு தர்மமாகவும் கருதியவை. ஆனால் திருவள்ளுவர் பிச்சை எடுப்பதை இழிவானது என வலியுறுத்தி 'இரவச்சம்' என்ற அதிகாரத்தையே இயற்றினார். பிற சமயங்கள் 'விதி அல்லது தலைவிதி' என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டவை. ஆனால் வள்ளுவர் அதற்கு நேர் எதிராக நிற்கிறார். 'ஊழையும் உப்பக்கம் காண்பர்' மற்றும் 'ஆள்வினையுடைமை' போன்ற அரிய அதிகாரங்கள் மூலம் மக்களுக்கு 'நீங்கள் முயற்சி செய்து செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும்' என்ற நம்பிக்கையை ஊட்டினார். அதுமட்டுமல்லாமல், அன்றைய சமுதாயத்தில் பரவிக்கிடந்த தீய பழக்கங்களை அவர் மிகக் கடுமையாகச் சாடினார். வள்ளுவரைப் போல வேறு யாரும் அப்படிச் சாடியதில்லை. கள்ளுண்ணாமை, கொல்லாமை, சூது, வரைவின் மகளிர், பிறனில் விழையாமை, இரவச்சம் போன்ற அதிகாரங்களில் அவர் சொல்லியிருப்பதைப் பார்த்தால், இந்தத் தீய பழக்கங்கள் நம் சமுதாயத்திலே பரவலாக இருந்திருக்கின்றன என்பது நமக்குத் தெரியவருகிறது. குறிப்பாக, 'பிறர்மனை விரும்பாமை' அல்லது பிறனில் விழையாமை' என்று அவர் சொன்னாரே, அதை அவருக்கு முன்னால் தோன்றிய சங்கப் புலவர்களோ அல்லது மற்றவர்களோ யாரும் குறிப்பிடவே இல்லை. அவருக்குப் பின்னால் வந்த நாலடியார் போன்ற நூல்கள்தான் அதைக் குறிப்பிடுகின்றன. அவருக்கு முன்னால் 'பிறனில்' என்ற கருத்தை எந்தப் புலவனும் பாடவில்லை. பிறனில் விழையாமையை அவர் ஏன் அவ்வளவு மிகக் கடுமையாகச் சாடினார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்தக்காலத்தில் அந்தப் பழக்கம் தமிழரிடம் பரவியிருந்த போது, அதை எதிர்த்து எழுந்த வள்ளுவரின் குரல் ஒரு புரட்சிக் குரல்! பழந்தமிழ் இலக்கியங்களிலே ஆடவர்கள் பரத்தையரோடு இருந்த பழக்கம் சுட்டிக்காட்டப்படுகிறதே தவிர, 'பிறனில் விழையாமை' எனும் கருத்து பழந்தமிழ் இலக்கியங்கள் எவற்றிலும் குறிப்பிடப்படவில்லை. ஆரியர்களின் அதர்ம வேதம், இதிகாசம், புராணம் ஆகியவற்றில் இந்தக் கருத்துகள் (பிறன்மனை விரும்புதல்) பரவலாக உள்ளன. எடுத்துக்காட்டாக, அகலிகை - இந்திரன் கதையை எடுத்துக்கொள்ளலாம். பல புராணங்களில் முனிவர்கள் பலருக்குத் தவறான தொடர்புகள் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த வடவரின் தவறான கருத்தைக் கண்டிக்கும் வகையிலேயே வள்ளுவர் 'பிறனில் விழையாமை' என்ற கருத்தை வலியுறுத்தினார் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். திருக்குறளுக்குத் தொண்டு செய்த அவர்களுடைய உரை நமக்கு என்றும் பெருமைக்குரியதாகும்" என்று பழ. நெடுமாறன் உரையாற்றினார்.
செய்திகள்
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாநாடு: "வள்ளுவரின் குரல் புரட்சிக் குரல்" — விருதுநகரில் பழ. நெடுமாறன் புகழாரம்!
The News Outlook
🕒 2 ஆக., 2026, 10:21 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

