விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காவல்துறையின் அலட்சிய போக்கைக் கண்டித்து உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பவர், தனது உறவினர் வீட்டிற்கு அருகே மதுபோதையில் தகராறு செய்தவர்களைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (21) மற்றும் ஈஸ்வரன் (18) ஆகிய இருவர் மணிகண்டனைக் கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு முன்பாகவே மணிகண்டன் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மீது தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளர் குருவுத்தாய் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியதாலேயே இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அலட்சியமாகச் செயல்பட்ட காவல் ஆய்வாளர் குருவுத்தாய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறையின் அலட்சியத்தால் உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்திற்குத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும், ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்பதில் உறவினர்கள் உறுதியாக இருப்பதால், அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

