விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முன்விரோதம் காரணமாக உறவினரான வாலிபரை, 17 வயது கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பெத்தலுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது பக்கத்து வீட்டில், நெருங்கிய உறவினரான சுந்தரமூர்த்தி என்பவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே குடிநீர் பிடிப்பதிலும், கழிவுநீர் வெளியேறுவதிலும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இரு தரப்பினரிடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் நிலவி வந்துள்ளது.
இந்நிலையில், இன்றும் இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஒருகட்டத்தில் இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, சுந்தரமூர்த்தியின் மகனும், சாத்தூர் அரசு கல்லூரியில் பயிலும் 17 வயது மாணவருமான நபர், ஆத்திரத்தில் முருகேசனின் சகோதரரான செந்தில்முருகன் (32) என்பவரை நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செந்தில்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட செந்தில்முருகன், சென்னையில் உள்ள உணவகம் (பேக்கரி) ஒன்றில் பணியாற்றி வந்தவர் என்பதும், விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தபோது இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர், உயிரிழந்த செந்தில்முருகனுக்கு மாமா முறையுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி கிழக்குக் காவல் நிலையப் போலிஸார், செந்தில்முருகனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகச் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், கல்லூரி மாணவனைக் கைது செய்துள்ளதுடன், அவரது பெற்றோரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறிய தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

