விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவஞானபுரம் ஊராட்சி, பெத்த நாச்சியார் தெருவில் அனுமதியின்றி, தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் தலைமையில் அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது, அரசு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த சுமார் 260 கிலோ தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட அந்த நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதத் தொகையான ரூ. 25,000 விதிக்கப்பட்டு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

