சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அமைந்துள்ள வெம்பக்கோட்டை நீர்த்தேக்க அணையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, அணையின் மதகுகளைப் பழுதுநீக்கிச் சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது வெம்பக்கோட்டை அணையில் 12 கன அடி நீர் இருப்பு உள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் உயர்ந்து அணை நிரம்பினால், எவ்வித தடையுமின்றி உபரி நீரைத் திறந்துவிடுவதற்காக இந்தத் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதகுகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவை எவ்வித சிரமமுமின்றி எளிதாக இயங்கும் வகையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் மதகுகளின் தரம் மற்றும் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கண்டறியப்படும் தொழில்நுட்பக் குறைபாடுகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருவதாக வைப்பாறு வடிநிலப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

