விருதுநகர்: விருதுநகர் அரசு பொது மருத்துவமனை உணவக ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் விரைவில் பொதுமக்கள் பங்கேற்புடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி எட்வர்ட் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சக்கணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, விருதுநகர் அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கான ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) திறப்புத் தேதி, நாளிதழ் விளம்பரம் வாயிலாக 02.07.2026 அன்று என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் டெண்டர் திறக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான முறையான காரணங்கள் ஏதும் அறிவிக்கப்படாத நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி மறுநாளே அவசர அவசரமாக ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளுக்கு முரணாகவும், அரசியல் தலையீட்டின் காரணமாகவும் ஒருதலைப்பட்சமாக குறிப்பிட்ட நபர் ஒருவருக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, முறைகேடாக நடத்தப்பட்ட இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மையான, சுகாதாரமான உணவை மலிவு விலையில் வழங்கத் தகுதியுள்ள மகளிர் சுயஉதவி குழுவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபானக் கடை மற்றும் மாலைப்பேட்டை தெருவில் உள்ள டாஸ்மாக் கடை ஆகியவற்றை உடனடியாக மூட வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, விரைவில் விருதுநகர் அரசு பொது மருத்துவமனை முன்பாக பொதுமக்களைத் திரட்டிப் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், விருதுநகரில் பிறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான 15.07.2026 அன்று, விருதுநகரில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் ஒரு நாள் முழுவதும் மூட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் காளிதாஸ், ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலமுருகன், திராவிடர் கழகத்தின் மாவட்டத் துணைத் தலைவர் நல்லதம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆறுமுக சக்திவேல், ஆதித் தமிழர் கட்சியின் சுப்புராஜ், தமிழ்ப் புலிகள் கட்சியின் பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகள் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

