விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி அருகே, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றியதால் அவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு டி.என்.ஏ (DNA) மரபணு சோதனை முடிவுகளின் அடிப்படையில் காதலனை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி காவல் எல்லைக்குட்பட்ட ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேர்வாரன். இவருடைய மகள் ஈஸ்வரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் இடையே கடந்த 2019ஆம் ஆண்டு காதல் ஏற்பட்டுள்ளது. ஈஸ்வரியின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவருக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும், திருமணமான ஒரே நாளில் கணவருடன் வாழ மறுத்த ஈஸ்வரி, தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஈஸ்வரி மீண்டும் ராஜ்குமாருடன் தனது காதலைத் தொடர்ந்துள்ளார். அப்போது, ஈஸ்வரியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறிய ராஜ்குமார், அவருடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் ஊருக்குள் தெரியவரவே, ஈஸ்வரி தனது பெற்றோரின் சம்மதத்துடன் குடும்பத்தினரை அழைத்துச் சென்று தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ராஜ்குமாரிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால், ராஜ்குமார் ஈஸ்வரியைத் திருமணம் செய்ய மறுத்ததோடு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
தன்னை ஏமாற்றிவிட்டு ராஜ்குமார் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை அறிந்த ஈஸ்வரி, அதிர்ச்சியும் மனவேதனையும் தாங்க முடியாமல் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஈஸ்வரியின் தந்தை சேர்வாரன் அளித்த புகாரின் பேரில், கூமாபட்டி காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, ஈஸ்வரியின் உடலை உடற்கூராய்வு செய்ததில், அவர் நான்கு மாத கர்ப்பமாக இருந்தது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து கோட்டாட்சியர் (RDO) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், உயிரிழந்த ஈஸ்வரியின் வயிற்றில் இருந்த சிசுவின் டி.என்.ஏ மற்றும் சந்தேகிக்கப்படும் ராஜ்குமாரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இந்த டி.என்.ஏ பரிசோதனை முடிவில், தற்கொலை செய்துகொண்ட ஈஸ்வரியின் கர்ப்பத்திற்கு ராஜ்குமார்தான் காரணம் என்பது அறிவியல் பூர்வமாக உறுதியானது.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பான சந்தேக மரண வழக்கை, தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கூமாபட்டி காவல்துறையினர் மாற்றியமைத்தனர். விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) கௌதம் கோயல் உத்தரவின் பேரிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி பாலசுந்தரம் வழிகாட்டுதலின்படியும், கூமாபட்டி காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையிலான காவல்துறையினர் குற்றவாளி ராஜ்குமாரை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் ஏமாற்றத்தால் 4 மாத சிசுவுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் கூமாபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

