சிவகாசி இந்தியாவின் பட்டாசுத் தலைநகராக மாற்றி உலகளாவிய தொழில்முனைவு மையமாக மாற்ற விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ‘ஸ்டார்ட்அப் இந்தியா’, ‘ஸ்டார்ட்அப் டிஎன்’ ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட ஸ்டார்ட்அப் கண்காட்சி மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த விவசாய ரோபோக்கள், மருத்துவக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, ஸ்டார்ட் அப் இந்தியா அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுப் பரிசீலித்தனர். இந்த கருத்தரங்கில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆற்றிய உரையில், விருதுநகர் மாவட்டத்தை தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கங்களின் மையமாக (Innovation Hub) மாற்றுவதற்கு ஏதுவாக, உள்ளூர் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஓ.சுகபுத்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். விருதுநகரில் தற்போது 8 பதிவு செய்யப்பட்ட தொழில் புத்தாக்க மையங்கள் (Incubation Centers) செயல்பட்டு வருவது மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, மாவட்டத்தின் 5 முக்கிய சவால்களுக்கான தீர்வுகளை அவர் முன்வைத்தார். விருதுநகர் மாவட்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் பட்டாசுத் தொழில், ஆண்டுக்கு ₹6,000 கோடி சந்தைப்படுத்தப்படுகிறது. இதில் 1.5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகப் பணிபுரிகின்றனர் (60% பெண்கள்). சிவகாசி இந்தியாவின் பட்டாசுத் தலைநகராகத் திகழ்ந்தாலும், இங்கு அடிக்கடி நடக்கும் விபத்துகள் பெரும் சவாலாக உள்ளன. 90% விபத்துகள் வேதிப்பொருட்களைக் கலக்கும் போதுதான் ஏற்படுகின்றன. தற்போது வரை இதற்கு முறையான தரப்படுத்தல் இல்லை. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் இணைந்து, தொழில்நுட்பக் கருவிகள் அல்லது நவீன 'டம்பளிங் மிக்சர்' போன்ற 3D தொழில்நுட்ப முறைகள் மூலம் பாதுகாப்பான கலவை தயாரிப்பை உருவாக்கினால், சிவகாசியை "உலகத்தின் பட்டாசுத் தலைநகராக" மாற்ற முடியும். மாவட்டத்தில் உள்ள 4.20 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், 1.70 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலங்களாக உள்ளன. இதற்கு முக்கியக் காரணம் 'சீமைக்கருவேல மரங்களின்' ஆக்கிரமிப்பாகும். இதனால் காட்டுப் பன்றிகள் போன்ற வனவிலங்குகளின் தொல்லை அதிகரித்து பயிர்கள் சேதமடைகின்றன. இந்த சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றி, அதன் உலர் கழிவுகளை மாற்று எரிசக்தியாகவோ அல்லது பயனுள்ள பொருளாகவோ மாற்றும் தொழில்நுட்பங்களை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கண்டறிய வேண்டும். இது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவும். விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி இடைநிற்றல், குழந்தைத் திருமணம், பதின்பருவக் கர்ப்பங்கள், மற்றும் அதனால் ஏற்படும் தாய்மார்கள்-குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகிய சமூகப் பிரச்சினைகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் "திசை மாறும்" என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய மாணவர்களின் தரவுகளைக் கண்காணித்து, அவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வரவும், அரசுப் பள்ளி மாணவர்களை நீட் (NEET), ஜேஇஇ (JEE), கியூட் (CUET), கிளாட் (CLAT) போன்ற உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் டேஷ்போர்டு தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். மாவட்டத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தைக் குறைக்க, அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிப் பெண்களின் உடல்நிலையைக் கண்காணிக்க 'ஸ்மார்ட் வாட்ச்' போன்ற பிரத்யேகத் தொழில்நுட்பங்களை உருவாக்க ஆட்சியர் அறிவுறுத்தினார். ராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் உள்ள 5 பழங்குடியின கிராம மக்களின் மேம்பாட்டிற்காக, காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு டிப் டீ மற்றும் மருத்துவக் குணமிக்க 'சங்கி பில்ஸ்' தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் பாராட்டப்பட்ட இந்தத் தயாரிப்புகளுக்குப் காப்புரிமை பெற அரசு முயன்று வருகிறது. "தொழில்நுட்பங்களை உருவாக்கத் தேவையான மனிதவளமும் ஆற்றலும் கல்லூரிகளிடமும் மாணவர்களிடமும் உள்ளன. அவற்றைச் சோதித்துப் பார்ப்பதற்கான களத்தையும், அரசுத் திட்டங்கள் மற்றும் நிதியுதவிகளுக்கான வழிகளையும் மாவட்ட நிர்வாகம் முழுமையாக வழங்கும்" என்று உறுதியளித்தார்.
செய்திகள்
சிவகாசி இந்தியாவின் பட்டாசுத் தலைநகராக மாற்றி உலகளாவிய தொழில்முனைவு மையமாக மாற்ற விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு
The News Outlook
🕒 9 ஜூலை, 2026, 10:44 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
