நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன வரகூர் கோம்பை பகுதியில், முறையான வடிகால் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கழிவுநீர் வெளியேற முறையான சாக்கடை வசதி இல்லாதது பெரும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு அச்சத்தால் வெளியேறிய குடும்பங்கள்: இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், உடைந்த பிளாஸ்டிக் குழாய்கள் வழியாகச் சாலையில் தேங்கி நிற்கிறது. இந்தச் சுகாதாரமற்ற சூழலால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரகாஷ் என்ற குடியிருப்பாளர், தனது இரண்டு குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வேறு வழியின்றி தனது குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறியதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து: இப்பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு அருகிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், மாணவர்களுக்குத் தொற்றுநோய் பரவும் அச்சமும் எழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பல மாதங்களாக இந்த அவல நிலை நீடிக்கிறது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, முறையான வடிகால் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.









