திருச்சியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பெண் ஊழியரிடம் ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ. 1.10 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றும் பெண் ஒருவரின் செல்பேசி எண்ணிற்கு கடந்த மாதம் 2-ம் தேதி தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் பெருமளவு லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அப்பெண், முதற்கட்டமாகச் சிறிய தொகையை முதலீடு செய்துள்ளார். எனினும், எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் குழப்பமடைந்த அவரை, மர்ம நபர் மீண்டும் தொடர்பு கொண்டு தொடர்ந்து முதலீடு செய்தால் இழந்த பணத்தை மீட்கலாம் என உறுதியளித்துள்ளார்.
இதனை நம்பிய அப்பெண், பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ. 1,10,000-த்தை மர்ம நபரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், அதன் பின்னரும் எவ்வித லாபமும் கிடைக்காததுடன், சம்பந்தப்பட்ட நபர்களின் செல்பேசி எண்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், இதுகுறித்து உடனடியாக சைபர் கிரைம் காவல் துறையினரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார், மோசடி கும்பல் பயன்படுத்திய வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் செல்பேசி எண்களைக் கொண்டு தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.









