கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே தீராத காது மற்றும் தலை வலியால் அவதிப்பட்டு வந்த 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை வட்டம், காரப்பட்டு அருகே உள்ள கதவணி கோட்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சண்முகம். இவரது மகன் செந்தமிழ் அரசன் (16), காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த ஆறு மாதங்களாக கடுமையான காது மற்றும் தலை வலியால் பாதிக்கப்பட்டிருந்த மாணவனுக்கு, காதுகளில் சீழ் வடிதல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்து வந்துள்ளன. இதற்காகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அடுத்த வாரம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை பெற்றோர் விவசாயப் பணிகளுக்காக நிலத்திற்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த செந்தமிழ் அரசன் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்தங்கரை காவல்துறையினர், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









