நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம் கோவில்பத்து கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அருள்மிகு எனையாளும் கண்ணபெருமாள் ஆலயத்திற்குச் சொந்தமான நிலத்தில் இருந்த மரங்களை வெட்டி விற்பனை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் நிலத்தில் இருந்த உயிருடன் கூடிய மரங்கள் மற்றும் பனை மரங்களைச் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் வெட்டி விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட நபர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, 10 நாட்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். கோவில் நிலத்தில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.









