திருச்சி ஸ்ரீரங்கம் காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அம்மா மண்டபம் படித்துறை, முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்கும் முக்கிய புண்ணியத் தலமாக விளங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்துவது வழக்கம். தர்ப்பணம் முடிந்த பின்னர் சிலர் தாங்கள் அணிந்திருந்த பழைய ஆடைகள் மற்றும் பூஜைப் பொருட்களை காவேரி ஆற்றிலேயே வீசுவதால், ஆற்றங்கரை மற்றும் படித்துறை பகுதிகளில் அதிகளவில் கழிவுகள் தேங்கி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுமண தம்பதிகள் ஏராளமானோர் அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்து காவேரி தாயை வழிபட்டு, தாலியை பிரித்து மீண்டும் கட்டும் பாரம்பரிய சடங்கை மேற்கொள்வார்கள். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் வழங்க உள்ளனர். இதனால் அம்மா மண்டபம் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு சுகாதாரமான சூழலை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் அம்மா மண்டபம் படித்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்துள்ள கழிவுகள், பழைய ஆடைகள் மற்றும் பூஜைக் கழிவுகளை அகற்றி தீவிர தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காவேரி ஆற்றை தூய்மையாக பாதுகாக்கும் வகையில் பக்தர்கள் பழைய ஆடைகள் மற்றும் கழிவுப் பொருட்களை ஆற்றில் வீசாமல், மாநகராட்சி அமைத்துள்ள குப்பைத்தொட்டிகளில் போட்டு ஒத்துழைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்திகள்
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் தூய்மை பணி தீவிரம்
The News Outlook
🕒 19 ஜூலை, 2026, 08:42 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
