விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தில், 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 125 நாள் வேலை திட்டம் தொடர்பாக பெண்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், 125 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், வேலை வழங்குவதற்காக ஒருவருக்கு ₹500 பெற்றுக் கொள்வதாக பணித்தள பொறுப்பாளர் மீது குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்த ஒன்றிய மேற்பார்வையாளர், “முறையாக பணி செய்தால்தான் முழு ஊதியம் வழங்க முடியும். யாருக்கும் பணம் கொடுத்து வேலை வாங்க வேண்டாம்; அப்படி செய்திருந்தால் அது தவறு” என்று தெரிவித்தார். மேலும், முழுமையாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே திட்டத்தில் சேர வேண்டும் என்றும் கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் கோரிக்கை
அதே கிராம சபை கூட்டத்தில், குரண்டி அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் விடுமுறை நாட்களில் பள்ளி வளாகம் மதுபானம் அருந்தும் இடமாக மாறிவிடுவதாக ஆசிரியர் ஒருவர் வேதனை தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கு உடனடியாக சுற்றுச்சுவர் அல்லது சுற்றுவேலி அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

