வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுக்கா மேல்பட்டி அருகே மேல்வழிதுணையாங்குப்பம் கிராமத்தில், மின்கம்பத்தில் பழுது பார்க்கும்போது உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் தற்காலிக ஒப்பந்த பணியாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வெங்கடேசனுக்கு நேற்று பிறந்தநாளாக இருந்தது என்பதால் உறவினர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
உயிரிழந்த வெங்கடேசன் (24), மின்சாரத் துறையில் தற்காலிக தினக்கூலி ஒப்பந்த பணியாளராக சில நாட்களாக பணியாற்றி வந்துள்ளார். மேல்வழிதுணையாங்குப்பம் கிராமத்தில் பிரபு என்பவரின் வீட்டில் ஏற்பட்ட மின்கோளாறை சரிசெய்ய அவர் சென்றதாக கூறப்படுகிறது.
மின்விநியோகத்தை துண்டித்ததாக கருதி வெங்கடேசன் மின்கம்பத்தில் ஏறிய நிலையில், அதே கம்பத்தில் சென்ற உயர் மின்னழுத்த மின் கம்பியை கவனிக்காமல் உரசியதால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மின்சாரத் துறையின் விளக்கம்
சம்பவம் குறித்து மின்சாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், வெங்கடேசன் எந்த அதிகாரியிடமும் தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக பழுது பார்க்கச் சென்றதாக தெரிவித்தனர். தற்காலிக பணியாளர்கள் நிரந்தர ஊழியர்களுடன் இணைந்து உதவி பணிகளில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்றும், மின்கம்பத்தில் ஏறி தனியாக பணியாற்ற அனுமதி இல்லை என்றும் விளக்கமளித்தனர்.
மேல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

