திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் பகுதியில் ஓடும் பாலாற்றில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டதால் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக கடும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
உள்ளூர் மக்களின் குற்றச்சாட்டின்படி, சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் இரவு நேரங்களில் பாலாற்றில் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக ஆற்றின் ஒரு பகுதியில் நீர் தேங்கி மாசடைந்து, ஆக்சிஜன் குறைவால் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாக கூறப்படுகிறது.
மாதனூரிலிருந்து குடியாத்தம் செல்லும் பாலாற்றுப் பாலத்தை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், துர்நாற்றத்தால் கடும் அவதியடைந்து வருவதாகவும், சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் போன்ற உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பாலாற்றின் அடியில் அமைக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் மாசடைந்த நீரால் பாதிக்கப்படக்கூடும் என்றும், இதனால் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரின் தரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, பாலாற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்களும் பாலாறு பாதுகாப்பு இயக்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த கோபிநாத் கூறுகையில்: “ஒரு வாரமாக துர்நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. பெரிய நோய் பரவும் முன்பே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

