மதுரை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு திருக்கோயில் வளாகம் மற்றும் மலைப்பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தீபத் திருவிழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி பாதுகாப்பாக தரிசனம் செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் பணிகளுக்காகக் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கணிசமான அளவில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.









