திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சண்முகா நகர் 3-வது தெருவில், பாதாள சாக்கடை மற்றும் வடிகால் பணிகளை முழுமையாக முடிக்காமல் சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் நலச்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சண்முகா நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று 3-வது தெருவில் சாலை போடும் பணி தொடங்கியபோது, சண்முகா நகர் நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முத்துமாரி, தலைவர் வேலாயுதன், செயலாளர் குமரன், பொருளாளர் செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் திரண்டு பணிகளைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பொதுமக்களின் குற்றச்சாட்டு:
இது குறித்து வழக்கறிஞர் முத்துமாரி கூறுகையில், 'குடியிருப்புப் பகுதிகளில் சாலை அமைக்கும்போது பழைய சாலையை அகற்றிவிட்டு, சாலையின் உயரத்தை அதிகரிக்காமல் புதிய சாலை அமைக்க வேண்டும் என்பது நீதிமன்ற வழிகாட்டுதல். ஆனால், இங்கு பழைய சாலையை அகற்றாமல் அதன் மீதே ஜல்லிகளைக் கொட்டி சாலை அமைப்பதால், குடியிருப்புகள் தாழ்வான நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது. இதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் வீடுகளுக்குள் புகும் சூழல் உருவாகும்' என்று குற்றம் சாட்டினார்.
மேலும், இப்பகுதியில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இன்னும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை என்றும், வடிகால் வசதிகளை முறையாகச் செய்த பின்னரே சாலை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.









