திருப்பத்தூர் மாவட்டம் கொடுமாம்பள்ளி பகுதியில் வாலிபர் கொலை வழக்கில் தந்தை மற்றும் மகன் உட்பட மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியில் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆனந்தராஜ் என்ற வாலிபர் இரும்பு ராடால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சர்வேசன், தேவராஜ், திலீப்குமார் ஆகிய மூன்று பேர் மீது திருப்பத்தூர் கிராமியக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மூவரும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அணில் வாகரே பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் நல்ல சிவன் உத்தரவின்பேரில் சர்வேசன், தேவராஜ், திலீப்குமார் ஆகிய மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.









