கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொளந்தாகவுண்டனூர் பகுதியில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பில் தரமற்ற கட்டுமானம் காரணமாக விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கொளந்தாகவுண்டனூர் பகுதியில் 125 வீடுகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதியன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக இக் குடியிருப்புகளைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பொதுமக்கள் அங்குக் குடியேறத் தொடங்கினர்.
இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலேயே கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக, சுவர்களில் ஆழமான விரிசல்கள் ஏற்பட்டு உடையும் அபாயத்தில் இருப்பதாகவும், தரைகள் பெயர்ந்து காணப்படுவதாகவும் குடியிருப்புவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி (லிப்ட்) இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ரூ.17.56 கோடி பெருமதிப்பில் கட்டப்பட்ட இந்த நவீன குடியிருப்பில் இத்தகைய குறைபாடுகள் இருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகக் தலையிட்டு, கட்டடத்தின் கட்டுமானத் தரம் குறித்து முழுமையான ஆய்வு நடத்த வேண்டும் என்றும், குறைபாடுகளை விரைந்து சீரமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தரமற்ற முறையில் பணிகளை மேற்கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.









