திருச்சி நெம்பர் ஒன் டோல்கேட் அருகே அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதிய கோர விபத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், அன்பில் சங்கமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜின் மகன் அஜித் (32). இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இவருக்குப் பின்னால் குமரகுடி பகுதியைச் சேர்ந்த தங்கராசுவின் மகள் செந்தூரியா (22) என்ற இளம்பெண் பயணித்தார். இவர்கள் இருவரும் அன்பில் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
லால்குடியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்து ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்திற்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. நெம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள செம்பழனி என்ற பகுதிக்கு வந்தபோது, முன்னால் சென்ற அரசு பேருந்தை அஜித் முந்த (Overtake) முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, திருச்சியிலிருந்து லால்குடி நோக்கி எதிரே வந்த கார் மீது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த பயங்கர விபத்தின் தாக்கத்தால் தூக்கி வீசப்பட்ட அஜித் மற்றும் செந்தூரியா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த சமயபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்தனர். பின்னர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், உடற்கூறாய்விற்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

