விருதுநகர்: விருதுநகர் அருகே வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்புறப் பகுதிகளில், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் செயல்படுபவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் செல்வம், "பொதுமக்களாகிய நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கிற்கும் நான் உண்மையோடும் விசுவாசத்தோடும் செயலாற்றுவேன். பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணம் முழுமையாக மக்கள் நலனுக்கே பயன்படுத்தப்படும். கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தங்கு தடையின்றி மேம்படுத்தப்படும்" என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் எவ்வித முறைகேடுகளும் இன்றி, பணியாளர்களுக்கு உரிய சம்பளம் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், "பொதுமக்கள் தங்களின் பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் மற்றும் பட்டா போன்ற வருவாய்த்துறை ஆவணங்களைப் பெறுவதற்கு அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலை இனி இருக்காது. இந்தச் சேவைகளைப் பெற யாரேனும் லஞ்சம் கேட்டால், உடனடியாக என்னிடம் தெரிவிக்கலாம்; நானே நேரடியாகத் தலையிட்டு அதற்குரிய தீர்வை ஏற்படுத்தித் தருவேன்" என்று தெரிவித்தார்.
சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுத்த எம்.எல்.ஏ, "மது மற்றும் கஞ்சா போதையில் பொது இடங்களில் யாராவது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலையோ அல்லது இடையூறையோ ஏற்படுத்தினால், அதுகுறித்து உடனடியாக என்னிடம் கூறுங்கள். காவல்துறை மூலம் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இறுதியாக, தமிழக முதல்வர் அறிவிக்கும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களும், எவ்வித லஞ்ச ஊழலும் இன்றி தங்கு தடையின்றிப் பொதுமக்களைச் சென்றடைவதை முழுமையாக உறுதி செய்வேன் என்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் தனது உரையில் வாக்குறுதி அளித்தார்.

