பட்டாசு தொழிலாளர்களுக்கு புதிய விடியல்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில், பட்டாசு ஆலை விபத்துகளில் தீக்காயமடையும் தொழிலாளர்களின் உயிரைக் காக்கும் வகையில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் அதிநவீன ‘மிகை அழுத்த பிராண வாயு சிகிச்சை மையம்’ (Hyperbaric Oxygen Therapy - HBOT) அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தென் மாவட்டங்களிலேயே முதன்முறையாக சிவகாசியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உயர்தர மருத்துவ வசதிக்கு பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தாய்-சேய் நலப் பிரிவு கட்டிடம் புதிதாகக் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிட வளாகத்திலேயே, சென்னை மற்றும் கோவைக்கு அடுத்தபடியாக, தமிழகத்திலேயே 3-வது மையமாக இந்த அதிநவீன மிகை அழுத்த ஆக்சிஜன் சிகிச்சை மையம் நிறுவப்பட்டுள்ளது.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் பட்டாசு ஆலை விபத்துகளில் தொழிலாளர்கள் பலர் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில், தீக்காயமடையும் தொழிலாளர்களின் காயங்களை விரைவில் குணப்படுத்தி அவர்களின் உயிரைக் காக்க, தமிழக சுகாதாரத் துறை தென் தமிழகத்திலேயே முதன்முறையாக இச்சிகிச்சை மையத்தை இங்கு அமைத்துள்ளது.
சிகிச்சையின் சிறப்பம்சங்கள்:
இந்த அதிநவீன இயந்திரம் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையானது, தீக்காயமடைந்த நோயாளிகளுக்குப் புதிய திசுக்கள் விரைவாக வளரவும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் பெரிதும் உதவுகிறது. பட்டாசு விபத்து காயங்கள் மட்டுமன்றி, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நீண்ட நாள் ஆறாத புண்களைக் குணப்படுத்தவும் இச்சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனச் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தீக்காயமடைந்த நோயாளிகளுக்குச் சிகிச்சை காலத்தில் நாள்தோறும் சுமார் ஒரு மணி நேரம் வீதம் இந்த இயந்திரத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். குறிப்பாக, 40 முதல் 50 சதவீதம் வரை தீக்காயமடைந்த தொழிலாளர்களுக்கு இச்சிகிச்சை அளிக்கப்படும்போது, காயங்கள் முழுமையாகக் குணமடைந்து, அவர்கள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அதிக வாய்ப்புள்ளது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் செந்தில்குமார் தெரிவிக்கையில், "தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இந்த மிகை அழுத்த ஆக்சிஜன் சிகிச்சை ஒரு வரப்பிரசாதமாகும். இக்கருவியின் மூலம் அளிக்கப்படும் தொடர் சிகிச்சை, திசுக்களைச் சீரமைத்து காயங்களை விரைவாகக் குணப்படுத்துவதுடன், ஆறாத புண்களிலிருந்து நோயாளிகள் முழுமையாக மீண்டு வரச் சிறந்த வாய்ப்பாக அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

