ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதிக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியரை, அடிப்படை வசதிகளைச் செய்து தர வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் 1-வது வார்டு பசும்பொன் நகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடிநீர் விநியோகம், மகளிர் கழிப்பறை, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் தெருவிளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் ஏதும் இன்றி பொதுமக்கள் தொடர்ந்து சிரமத்திற்குள்ளாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சேத்தூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் வருகை தந்தார். இதனையறிந்த அப்பகுதிப் பெண்கள், ஆட்சியரை நேரில் சந்தித்துத் தங்களது பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அவரைச் சூழ்ந்து முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது முற்றுகையைக் கைவிட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர்.

