அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன சத்தியாகிரகப் போராட்டம் மற்றும் அமைதிப் பேரணி நடைபெற்றது.
விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, கிழக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மேற்கு மாவட்டத் தலைவர் ராஜ்மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பைக் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து, தேசபந்து மைதானத்திலிருந்து அமைதிப் பேரணி தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணி, காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் நகரத் தலைவர் நாகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயிலு முத்து, வட்டாரத் தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

