விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையின் சித்தா மருத்துவ பிரிவில், நாட்டு அரிசி மற்றும் சிறுதானிய உணவுகளின் உடல்நலப் பயன்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் 20 வகையான நாட்டு அரிசி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பவளச்செம்மணி, ரத்தசாலி, பூங்கார் உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகளின் மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து சிறப்புகள் குறித்து தகவல் குறிப்புகள் மூலம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கண்காட்சியின் சிறப்பம்சமாக, சித்தா பிரிவு உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் மணிமேகலா, நாட்டு அரிசி மற்றும் சிறுதானியங்களை பயன்படுத்தி தமிழக முதல்வர் விஜயின் உருவப்படத்தை கலைநயத்துடன் வடிவமைத்திருந்தார். வரகு, பனிவரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஓவியம் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
மேலும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உணவு முறையில் சிறுதானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்வதன் அவசியம், பாரம்பரிய நாட்டு அரிசிகளின் பயன்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து சித்தா மருத்துவ பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

