விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3000 பட்டாசு பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்....! சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் கடந்த 26ம் தேதி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் உத்தரவின் பேரில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக வீடுகளில், தகர செட்டுகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருவதையும், அதேபோன்று உரிம மில்லாத கட்டிடங்களில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதையும் கண்டறிந்து, சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்து, கள்ளத்தனப் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்தும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சிவகாசி பைபாஸ் சாலையில் கனிராஜ் என்பவர் உரிமம் பெற்று நடத்தி வரும் பட்டாசுக் கடையில் திடீர் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், பட்டாசுக்கடையின் அருகிலுள்ள செயல்படாத பஞ்சு மில் கட்டிடத்தில் அனைத்து வகையான பட்டாசு ரகங்களுடன், கம்பி மத்தாப்பு, கலர் மத்தாப்பு ஆகியனவற்றை சுமார் 3- ஆயிரம் அட்டைப்பெட்டிகளில் உரிமமின்றி குவியல்- குவியலாக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 75- லட்சத்திற்கும் அதிமாக இருக்கும் என தெரிகிறது. இதையடுத்து கனிராஜை கைது செய்த போலீசார் சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டசுகளை பறிமுதல் செய்தனர். சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அனுமதி இல்லாத கட்டிடங்களில் நடைபெறும் பட்டாசு தயாரிப்பு குறித்தும், உரிமமில்லாத இடங்களில் பட்டாசுகளை இருப்பு வைத்திருப்பது பற்றியும் போலீசாரின் தொடர் சோதனை நீடிக்குமென காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3000 பட்டாசு பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்....!
The News Outlook
🕒 1 ஆக., 2026, 09:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

