விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் ஆம்னி பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், ஓட்டுநர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி (53) என்பவர் இந்த பேருந்தை இயக்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அந்தப் பேருந்து சாத்தூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் பின்பக்க டயர் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தை ஓட்டி வந்த குருசாமி மற்றும் அதில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தூர் தாலுகா காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தூர் தாலுகா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

