விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரோசல்பட்டி பஞ்சாயத்து, காந்தி நகர் பகுதியில் ₹55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியைச் சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.செல்வம் பூமி பூஜை செய்து இன்று தொடங்கி வைத்தார்.
ரோசல்பட்டி பஞ்சாயத்து காந்தி நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சாலை கடந்த பல மாதங்களாகப் பராமரிப்பின்றி மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அப்பகுதியைக் கடந்து செல்லப் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். சாலை வசதியைச் சீரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனுக்களை அளித்திருந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, காந்தி நகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவிற்கு ₹55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதற்கான பணிகள் பூமி பூஜையுடன் முறைப்படி தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், வடக்கு ஒன்றியச் செயலாளர் சமுத்திரக்கனி, வட்டார வளர்ச்சி அலுவலர் லியாகத் கான், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

