விருதுநகர் மதுரை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்டலத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நடத்துநர் பணிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலவி வரும் வரவு-செலவு பற்றாக்குறையை ஈடுகட்ட பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தனியார்மயத்தை கைவிட கோரிக்கை
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயம் மற்றும் ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிக்கும் நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டும், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்த நிலுவைப் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், தற்போது 4 ஆண்டுகளாக உள்ள ஊதிய ஒப்பந்த காலத்தை 3 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல பொதுச் செயலாளர் மூர்த்தி, சம்மேளன துணைப் பொதுச் செயலாளர் பாண்டியன், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், மாநில துணைச் செயலாளர் பொன்னுப்பாண்டியன், மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

