விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பச்சைப் பட்டுடுத்தி வைப்பாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த மாரியம்மன்.
தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்று விளங்கும் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆடி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மனுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வா ஆடி கடைசி வெள்ளி திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் பச்சை பட்டுடுத்தி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வைப்பற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மன் பச்சை பட்டுடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்ததால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விழாவில் தென் தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பாத யாத்திரையாக வருகை தந்து அக்கினி சட்டி எடுத்தும், அழகு குத்தியும், அம்மனுக்கு தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட எஸ்பி கௌதம் கோயல் தலைமையில் 4 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

