விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாமூல் தர மறுத்த மீன் வியாபாரிகளின் கடைகளைச் சேதப்படுத்தி, தொழில் செய்ய விடாமல் தடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகிகள் மீது நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த குருவையா, ராஜபாண்டி, சத்தியமூர்த்தி, ஜான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், அங்குள்ள உழவர் சந்தை அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சிலர், இங்குத் தொடர்ந்து மீன் கடைகளை நடத்த வேண்டுமென்றால் ரூ.1 லட்சம் மாமூல் தர வேண்டும் எனக் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. வியாபாரிகள் மாமூல் தர மறுத்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு விசிக மாவட்டச் செயலாளர் 'பல்க்' ராஜா தலைமையிலான 10 பேர் கொண்ட கும்பல், மீன் கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில் முட்செடிகளைப் போட்டும், பீர் பாட்டில்களை உடைத்துப் போட்டும் வியாபாரத்தை முடக்கும் நோக்கில் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
தங்களது வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தச் சதி தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிப் பதிவுகளை ஆதாரமாகச் சேகரித்த மீன் வியாபாரிகள், இன்று நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துப் புகார் அளித்தனர்.
பொய் வழக்கு போடுவதாக மிரட்டல்:
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கூறுகையில், "மாமூல் தர மறுத்ததால் எங்கள் கடைகளில் முட்செடிகளைப் போட்டும், பாட்டில்களை உடைத்தும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பாகப் புகார் அளிக்கக் காவல் நிலையம் சென்றபோது, விசிக மாவட்டச் செயலாளர் 'பல்க்' ராஜா எங்களைப் பார்த்து, 'நீங்கள் புகார் அளித்தால், மீன் சந்தைக்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி, உங்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வைப்பேன்' என பகிரங்கமாக மிரட்டினார்" என்று தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையப் போலிஸார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

