விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பந்தல் அமைத்து முற்றுகை: பேச்சுவார்த்தை நடத்த வந்த டி.எஸ்.பி.யுடன் வாக்குவாதம்!விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒத்தப்புளி விலக்கு அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி, கிராம மக்கள் இன்று மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். கடந்த சில நாட்களாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக, இன்று காலை டாஸ்மாக் கடை முன்பு பந்தல் அமைத்து, பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு அமர்ந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுபான விற்பனை முழுமையாக பாதிக்கப்பட்டது. போராட்டம் குறித்து தகவலறிந்த சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் அனில்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "பலமுறை மனுக்கள் அளித்தும், அதிகாரிகள் உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் வாக்குறுதி வேண்டாம்; டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்" என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் டாஸ்மாக் கடை செயல்படுவதால், மது அருந்திவிட்டு வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறுவது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து நிலவி வருவதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பந்தல் அமைத்து முற்றுகை: பேச்சுவார்த்தை நடத்த வந்த டி.எஸ்.பி.யுடன் வாக்குவாதம்!
The News Outlook
🕒 13 ஜூலை, 2026, 12:23 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

