துறையூர் அருகே வாலிஸ்புரம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு சுமார் 50 டன் அளவிலான குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மதியம் குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
தகவலறிந்த துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால் பெரம்பலூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து சுமார் 8 மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இதனிடையே குப்பைகள் எரிவதால் ஏற்பட்டுள்ள கடுமையான புகை துறையூர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் புகை மற்றும் மாசு கலந்த காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புகையால் சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை மாவட்ட அலுவலர் அனுசியா மற்றும் மாவட்ட உதவி அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, தீயணைப்பு பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீவிரமாக போராடி வருகின்றனர்.

