நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 19-ம் தேதி அதிகாலை 02.30 மணி முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி மாலை 05.30 மணி வரை கேரளா, தென் தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளது. மேலும், தாழ்வான கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகுதல் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகள் மற்றும் இதர கடல்சார் உபகரணங்களைப் பாதுகாப்பான முறையில் நங்கூரமிட்டு, உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கடல் சீற்றம் காரணமாக நெல்லை மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் தற்காலிகமாக முழு தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலோர மீனவ கிராமங்களில் தொடர்ச்சியான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மீன்வளத் துறை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. என தெரிவித்துள்ளார்.
செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை - கலெக்டர் ஆனந்த் மோகன் எச்சரிக்கை
🕒 18 ஆக., 2026, 04:42 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
