விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில், 80 சதவீத தீக்காயமடைந்த தொழிலாளி ஒருவர் தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாத்தூர் அருகேயுள்ள முத்துசாமிபுரத்தில் சுந்தர் என்பவருக்குச் சொந்தமான, மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) உரிமம் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 10-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட இந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பிற்கான மூலப்பொருட்களைக் கலவை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து நிகழ்ந்ததில், ஆலையின் ஒரு அறை பலத்த சேதமடைந்தது.
இவ்விபத்தில், மூலப்பொருட்களைக் கலவை செய்து கொண்டிருந்த காக்கிவாடான்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி (61) என்ற தொழிலாளி 80 சதவீத தீக்காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவருக்கு, சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்துத் தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

