விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு என்ற பெயரில் தொழிலை முடக்கும் நடவடிக்கையைக் கண்டித்து, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிலாளர்கள் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பட்டாசு ஆலைகளில் அரசு அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விதிமீறல்கள் இருப்பதாகக் கூறி சுமார் 200 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக வேலையிழந்து, தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் ஆலைகளை தொடர்ந்து மூடுவதைக் கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளைக் காலதாமதமின்றி உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
வெம்பக்கோட்டை பகுதி பட்டாசு கூலித் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். ஆலைகளை உடனடியாகத் திறக்கக் கோரி அவர்கள் எழுப்பிய கண்டன முழக்கங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தின.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் (திமுக) கடற்கரை ராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "கடந்த திமுக ஆட்சியின் போது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அதிகாரிகளிடம் பட்டாசு ஆலைகளில் தீவிர ஆய்வு நடத்த வேண்டாம் என்றும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மென்மைப் போக்கைக் கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நானும் அதையேதான் தற்போதும் வலியுறுத்துகிறேன். இதனாலேயே தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருந்தனர்" எனக் குறிப்பிட்டார்.
மேலும், பட்டாசுத் தொழிலாளர்களின் தற்போதைய பாதிப்புகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிச்சயம் குரல் எழுப்பி, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண பாடுபடுவேன் என்றும் சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.

