விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை கிராமத்தில் உள்ள அருள்மிகு இறங்கி முத்தம்மன் கோவில் உரிமை மற்றும் திருவிழா நடத்துவது தொடர்பான விவகாரத்தில், கோட்டாட்சியர் அலுவலகத்தை ஒரு பிரிவினர் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொப்பலாக்கரை கிராமத்தில் அமைந்துள்ள இறங்கி முத்தம்மன் கோவிலுக்கு, அதே ஊரைச் சேர்ந்த இரு வேறு பிரிவினர் கடந்த பல ஆண்டுகளாகத் போட்டிபோட்டு உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால் இரு தரப்பினரிடையே தொடர் முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில், வரும் 14-ஆம் தேதி கோவில் திருவிழாவை நடத்த அனுமதி கோரி ஒரு பிரிவினர் காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தனர். ஆனால், கோவில் தொடர்பாக ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு பிரச்சனை நிலவுவதைக் சுட்டிக்காட்டி, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு திருவிழா நடத்தக் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.
முன்னதாக, இக்கோவிலில் இரு பிரிவினரும் இணைந்து வழிபாடு நடத்தலாம் என்றும், ஆனால் தனியாகத் திருவிழா நடத்த அனுமதி இல்லை என்றும் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், பொதுமக்கள் இணைந்து வழிபாடு செய்ய அனுமதி அளித்ததுடன், கோவில் உரிமை தொடர்பான தகராறு குறித்து உரிமையியல் (சிவில்) நீதிமன்றத்தை அணுகுமாறும், திருவிழா நடத்த அனுமதி இல்லை என்றும் உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும், கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, தொப்பலாக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கோவில் உரிமை குறித்துச் சிவில் நீதிமன்றத்தை நாடுமாறும், திருவிழா அனுமதி தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் அதிகார தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், தங்களது கோரிக்கை மனுவை கோட்டாட்சியரிடம் அளித்துவிட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர்.

