விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், நடைபெறவுள்ள ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மா. கார்த்திக் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில், சித்தர்களின் ஆன்மீக பூமியாகப் போற்றப்படுகிறது. இங்கு வந்து இறைவனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு நடத்திச் செல்கின்றனர்.
இக்கோயிலின் மிக முக்கியத் திருவிழாவான ஆடி அமாவாசை பெருவிழா வரும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பான தரிசனத்திற்காக மலை அடிவாரப் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தற்காலிக பேருந்து நிலைய அமைப்புகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், திருவிழாவைச் சிறப்பாக நடத்துவது தொடர்பாக கோயில் நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவர் விரிவான ஆலோசனை நடத்தினார்.

