சென்னை மாநகரில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான வீட்டு பட்டியலிடல் மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்தப் பணிக்காக ஆயிரக்கணக்கான கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடு தோறும் சென்று தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கணக்கெடுப்பின் போது, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, குடியிருப்பு வகை, குடிநீர் வசதி, கழிப்பறை, மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள் பயன்பாடு, வாகன வசதி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சேகரிக்கப்படும் தகவல்கள் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்டங்களை திட்டமிட உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் முதன்முறையாக முழுமையான டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. கணக்கெடுப்பாளர்கள் சிறப்பு மொபைல் செயலி மூலம் தகவல்களை நேரடியாக பதிவு செய்வதால் தரவுகளின் துல்லியம் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், வழங்கப்படும் அனைத்து தகவல்களும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

