கல்வி மற்றும் விளையாட்டுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள்; நான் இருக்கிறேன்!" - விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் உறுதி! மாணவர்களே, நீங்கள் ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது அல்லது கல்வியில் சிறந்து விளங்குவது என எதுவாக இருந்தாலும், அதற்கான உதவிகளைச் செய்யத் தளபதி விஜய் அண்ணன் தயாராக இருக்கிறார்.விருதுநகரில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, "போதையை ஒழிப்போம், போதையற்ற சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம்" என்ற தலைப்பில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற தியான நிகழ்ச்சி, அங்குள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம், மாணவர்களிடையே உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது,"இன்று இந்த மேடையில் உங்களுடன் அமர்ந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பிரதிநிதியாகவே நான் இங்கு வந்துள்ளேன். ஒரு சாமானியக் குடும்பத்தில் இருந்து வந்த என்னைப் போன்ற ஒருவரை, 32 வயதிலேயே பெருந்தலைவர் காமராஜர் பிறந்த இந்த மண்ணில் எம்.எல்.ஏ-வாக உயர வைத்தது, l விஜய் அவர்களின் மீதான மக்களின் அன்பும், அவர் எனக்கு அளித்த வழிகாட்டுதலுமே ஆகும்.'வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை மாணவர்களின் கல்விக்கும், உதவிக்கும் செலவிட வேண்டும்' என்று அவர் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடமே, இன்று நான் மக்களுக்குப் பணியாற்றும் உந்துசக்தியாக உள்ளது." "விருதுநகரில் கல்வி, உணவு மற்றும் சட்ட ஆலோசனைகளை இலவசமாக வழங்கும் திட்டங்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். 150 மாணவர்களுக்கு காலை உணவு, 600 மாணவர்களுக்கு இலவசக் கல்விப் பயிலகம் என முதல்வரின் உத்தரவுப்படி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். மாணவர்களே, நீங்கள் ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது அல்லது கல்வியில் சிறந்து விளங்குவது என எதுவாக இருந்தாலும், அதற்கான உதவிகளைச் செய்ய விஜய் அண்ணன் தயாராக இருக்கிறார். பள்ளி கட்டணம் முதல் விளையாட்டுப் பயிற்சிகள் வரை எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் எங்களிடம் கேளுங்கள். எம்.எல்.ஏ என்பது அதிகாரப் பதவி அல்ல, அது மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு பொறுப்பு. அந்த வகையில், எந்த நேரத்திலும் உங்களைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்." "இன்றைய காலகட்டத்தில் கல்வி ஒன்றே ஒருவரை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். கல்வி மட்டுமன்றி, ஒழுக்கமும் மிக முக்கியம். எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த யாரும் மது அல்லது புகைப்பழக்கம் கொண்டிருக்க மாட்டார்கள். அத்தகைய ஒழுக்கமான ஒரு சமுதாயத்தை உருவாக்கவே நாங்கள் பயணிக்கிறோம். உங்களுடைய உழைப்பும் ஒழுக்கமும்தான் உங்கள் பெற்றோர்களுக்குப் பெருமை சேர்க்கும். எனவே, போதைப் பழக்கத்திற்கு இடமளிக்காமல், கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும்" என மாணவர்களிடையே உரையாற்றினார்.
செய்திகள்
கல்வி மற்றும் விளையாட்டுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள்; நான் இருக்கிறேன்!" - விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் உறுதி!
The News Outlook
🕒 14 ஜூலை, 2026, 11:18 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

