விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, ஐந்தாம் திருநாளான நேற்று இரவு ‘ஐந்து கருட சேவை’ வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நாள்தோறும் இரவு நேரங்களில் ஸ்ரீ ஆண்டாளும், ரெங்கமன்னாரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஐந்தாம் திருநாளை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற ‘ஐந்து கருட சேவை’ நடைபெற்றது. இதில் முதலில் சிறிய அன்ன வாகனத்தில் பெரியாழ்வார் எதிர்கொண்டு அழைக்க, அதைத் தொடர்ந்து கருட வாகனத்தில் ரெங்கமன்னார் பவனி வந்தார். அதன்பின் பெரிய அன்ன வாகனத்தில் ஸ்ரீ ஆண்டாளும், தொடர்ந்து கருட வாகனங்களில் முறையே பெரிய பெருமாள், சீனிவாசப் பெருமாள், சுந்தரராஜ பெருமாள் மற்றும் திருத்தங்கல் அப்பன் பெருமாள் ஆகிய ஐந்து பெருமாள்களும் வரிசையாக எழுந்தருளிப் பவனி வந்தனர்.
இரவு முழுவதும் விடிய விடிய நடைபெற்ற இந்தத் திருவீதி உலாவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரத வீதிகள் மற்றும் மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியும், ஆடிப்பாடியும் மெய்மறந்து வழிபட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
விழாவிற்கு வருகை தந்த பக்தர்களின் வசதிக்காக இரவு முழுவதும் இலவசமாகப் பால் மற்றும் தேநீர் விநியோகிக்கப்பட்டது. பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டதால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

