வேலூர் மாவட்டம் டிட்டர் லைன் பகுதியில் செயல்பட்டு வரும் வேலூர் மாவட்ட ஆயுதப்படையில்
400-க்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், முக்கிய பொறுப்புகளில் அதிகாரிகள் இல்லாததால் நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக காவலர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.
ஆயுதப்படையில் இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இல்லாத சூழலை பயன்படுத்தி, எழுத்துப் பணிகளை கவனித்து வரும் முருகன் என்பவர் காவலர்களிடம் அதிகாரம் செலுத்துவதாக சில காவலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமக்கு ஒத்துழைக்கும் காவலர்களுக்கு சாதகமான பணிகளும், தங்களது விருப்பத்திற்கு உடன்படாதவர்களுக்கு கடினமான பணிகளும் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், பெண் காவலர்கள் உள்ளிட்டோரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பணிச்சார்ந்த நடவடிக்கைகளில் முறைகேடாக செயல்படுவதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என காவலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் இல்லாததால் நிர்வாகத்தில் சிக்கலா?
கடந்த காலங்களில் வேலூர் ஆயுதப்படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பட்டை ரவி, காவலர்களுக்கு விதிமுறைகளின்படி பணிகளை ஒதுக்கி, பாரபட்சமின்றி நிர்வாகம் செய்ததாக அங்கு பணியாற்றியவர்கள் நினைவுகூருகின்றனர். அப்போது பணியாற்றிய டிஎஸ்பியும் சிறப்பான நிர்வாகத்தை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அந்த அதிகாரிகள் ஓய்வு பெற்ற நிலையில், ஆயுதப்படையில் உரிய கண்காணிப்பு இல்லாததால் பணிப்பிரிவு மற்றும் டூட்டி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் பிரச்சினைகள் ஏற்படுவதாக காவலர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
ஆயுதப்படையில் காவலர்களுக்கு வழங்கப்படும் டூட்டி, பணியிட ஒதுக்கீடு, எழுத்தர் பிரிவின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், எழுத்தர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
மேற்கண்ட முறைகேடு மற்றும் கையூட்டு குற்றச்சாட்டுகள் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையிலானவை. அவற்றின் உண்மைத் தன்மை அதிகாரப்பூர்வ விசாரணை மூலம் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.

