விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் நியாய விலைக் கடைகளில் நிலவி வரும் POS இயந்திர சர்வர் கோளாறுக்கு தீர்வு காண வலியுறுத்தி, நியாய விலைக் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர் தாலுகாவில் மொத்தம் 80 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 52 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக POS இயந்திரங்களில் சர்வர் பிரச்சினை இருப்பதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை முறையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கும், கடை விற்பனையாளர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகவும், பணியாளர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
50-க்கும் மேற்பட்டோர் போராட்டம்
சர்வர் பிரச்சினை குறித்து சாத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் சிவானந்தத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, 50-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் சாத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது, நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் POS மின்னணு இயந்திரங்களை தலையில் சுமந்தபடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இயந்திரங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
உதவி வட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை
போராட்டம் நடைபெற்ற நேரத்தில் சாத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் இல்லாததால், பணியாளர்கள் அலுவலக வாசலில் காத்திருந்தனர். பின்னர் உதவி வட்டாட்சியர் தீபாவுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, POS இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள சர்வர் கோளாறு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

