விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், பட்டா வழங்கக் கோரி விவசாயி ஒருவர் ஆட்சியர் முன்பு படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ராஜபாளையத்தைச் சேர்ந்த விவசாயி வைரமுத்து, வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனது பூர்வீக விவசாய நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி மனு அளித்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடி வருவதாகவும், கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் என பல்வேறு அதிகாரிகளிடம் இதுவரை 40 மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தொடர்ந்து பட்டா கேட்டு போராட தன்னால் முடியவில்லை என தெரிவித்த வைரமுத்து, தனது விவசாய நிலத்தை மாவட்ட நிர்வாகத்திடமே ஒப்படைத்துவிடுவதாகக் கூறி, ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சக விவசாயிகள் அவரை சமாதானப்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்தினர்.
விவசாயியை கடிந்து கொண்ட ஆட்சியர்
தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, விவசாயி போராட்டத்தில் ஈடுபட்ட விதம் தவறானது என்றும், இதுபோன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பட்டா தொடர்பான கோரிக்கைக்கு உரிய நடைமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திய நிலையில், சம்பவத்தால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

