வேலூர் மாவட்டத்தில் 80வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், வேலூர் கோட்டையில் உள்ள கொடிமரத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நேதாஜி விளையாட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சுதந்திர தின நிகழ்ச்சியில் ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி, காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அணிவகுப்புகளின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டதுடன், அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் ரூ.1.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பல்வேறு பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

