நாட்டின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் கிராம சபைக் கூட்டங்களும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முக்கியத் திருக்கோவில்களில் சமபந்தி விருந்துகளும் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டாள் திருக்கோவில், வைத்தியநாத சுவாமி திருக்கோவில் மற்றும் மாரியம்மன் திருக்கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமபந்தி அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கார்த்திக் கலந்துகொண்டு சமபந்தி விருந்தினைத் தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களுக்கு வேஷ்டி மற்றும் சேலைகளையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, வள்ளலார் இல்லப் பகுதியில் அமைந்துள்ள வள்ளலாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், மக்கள் நலம் பெற வேண்டி அங்கு நடைபெற்ற சிறுவர்களின் சிறப்புப் பிரார்த்தனையிலும் அவர் பங்கேற்றார்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவினை வழங்கித் தொடங்கி வைத்த அவர், குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்வுகளில் ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டனர்.

