அரியலூர் மாவட்டத்தில் 80வது சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திறந்த ஜீப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உடன் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட ஆட்சியர், காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். உலக அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கில் வெள்ளைப் புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன், இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தை பிரதிபலிக்கும் பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டன.
விழாவில் சிறப்பாக பணியாற்றிய 285 அரசு அலுவலர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், 51 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகளை நடத்தி சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர்.

