சிவகங்கை மாவட்டத்தில் 80வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ், இ.ஆ.ப., தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 8 பயனாளிகளுக்கு ரூ.2.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். மேலும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 52 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த 74 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
கலைநிகழ்ச்சியின்போது திடீர் பரபரப்பு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியிருந்த வேளையில், சிவகங்கை அருகே உள்ள பொன்னாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பாஸ்கரன் திடீரென விழா மேடையின் முன்பகுதியில் தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தனது வீட்டிற்கு செல்லும் பாதையை ஊராட்சி மன்ற தலைவர் மறித்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். இதனால் விழா அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் முதியவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற்றன.

