நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள டோனாவூர் செட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஐக்கோர்ட்மகராஜா. இவரது மனைவி நாகமாரி. இவர்களுக்கு அதே பகுதியில் பூர்விகமாக குடிசைவீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் ஐகோர்ட் மகராஜாவின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன் வசித்து இறந்துவிட்டார். இந்த நிலையில் தற்போது இந்த வீட்டை மகராஜன் புதுப்பித்து வீட்டிற்கு தீர்வை மற்றும் மின் இணைப்பிற்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் அதிகாரிகள் வீடு புறம்போக்கு பகுதியில் உள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்துவிடுகின்றனர். ஆனால் அதே பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளது அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . இதனை வைத்து மகராஜன் பலமுறை தனது வீட்டிற்கு மின் இணைப்பு கேட்ட நிலையில் அதிகாரிகள் அவதூறாக பேசி அனுப்பி மகராஜனை அனுப்பியதாக தெரிகிறது. இதனை அடுத்து மகராஜன் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் மனு அளிக்க வந்தநிலையில் கணவர் மகராஜன் மட்டும் மனு அளிக்க சென்றுள்ளார் அப்போது ஆட்சியர் அலுவலக போர்டிக்கோ அருகில் அவரது மனைவி நாகமாரி நின்றுகொண்டிருந்த நிலையில் திடிரென கையில் வைத்திருந்த தின்னரை மேலே உடலில் ஊற்றி தீ குளிக்க முயற்சித்த போது அருகில் இருந்த போலீசார் ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். இதனை அடுத்து கணவன் மனைவி இருவரையும் போலீசார் பாளையங்கோட்டை காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தினமும் வேலை நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களை போலீசார் விசாரித்த பின்பே உள்ளே அனுப்பி வைப்பர்.அதிலும் குறிப்பாக திங்கட்கிழமை மனுநீதி நாள் முகாம் என்பதால் போலீசார் மனு அளிக்க வரும் மக்களை ஆண் பெண் என தனித்தனியாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிப்பர்.
இத்தகைய பலத்த பாதுகாப்பையும் மீறி பெண் ஒருவர் எளிதில் தீ பற்றக்கூடிய தின்னரை ஆட்சியர் அலுவலகத்திற்குள் கொண்டு வந்து தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மட்டும் ஆட்சியர் அலுவலகத்தில் இருவர் தீ குளிக்க முயற்சி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

